Saturday, February 20, 2010

காளீசு-2

          மறுநாள் காலை எழுந்ததில் இருந்தே மாலை எப்போது வரும் என்று காத்து இருந்தாள் காளீசு.பள்ளிக்கூடம் விட்டு நேராக கிழவியின் வீட்டுக்கு சென்று விட்டாள். "என்னடி இது.. ஒரு நாளும் இல்லாத அதிசயமா இம்புட்டு வேமா வந்துட...மழை கொட்ட போவுது.சரி போ... பொய் வேலைய பாரு..."கிழவிக்கு காரணம் ஒன்றும் புரியவில்லை. எப்பொழுதும் 15 குடம் தண்ணீர் என்றால் இன்று முப்பது குடம் எடுத்து ஊற்றினாள். போய்த் திரும்பும் வழியில் உள்ள முற்றத்தில் இருக்கும் எரோபிலேனை காணலாம் என்று.முற்றத்தை சுற்றி உள்ள பகுதிகளைக் கழுவி விட்டாள்."இன்னிக்கு என்ன ஆச்சு இவளுக்கு.." கிழவி ஆச்சர்யப்பட்டு போனாள். கலீசு ஏரோபிளேனில் மட்டுமே தன் கவனத்தை வைத்து இருந்தாள்.இன்னும் இன்னும் அவளை அது வசீகரித்துக் கொண்டே இருந்தது.இப்படியே தான் அவளுக்கு திருவிழா நடந்த ஒரு வாரமும் கழிந்தது.
         வழக்கம் போல எரோபிலேனைப் பார்பதற்காக பள்ளியில் இருந்து நேராக கிழவி வீட்டுக்கு வந்த காலீசுக்கு அன்று ஏமாற்றமே மிஞ்சியது.அனைவரும் புறப்பட்டு ஊருக்குச் சென்று விட்டனர்.உடன் எரோபிலேனும்.. அழுகை முட்டிக் கொண்டு வந்தது காளீசுக்கு...ஏமாற்றங்கள் புதிதில்லை என்பதால் அடக்கிக் கொண்டாள். "அடுத்து எப்ப பெரியாத்தா அல்லாரும் வருவாக...".முத்துமாரியம்மன் கோயில் கொடைக்கு வரச் சொல்லியிருக்கேன்.வர்றாகளோ என்னவோ..." அவள் அவள் கஷ்டத்தில் பெருமூச்சு விட்டாள். எரோபிலேனோடு காளீசின் குதூகலமும் சென்று விட்டது. தினம் தூங்குவதற்கு முன் எரோபிலேனை நினைத்துக் கொண்டு தான் தூங்குவாள்.அடுத்த திருவிழாவுக்காக நாட்களை எண்ணிக் கொண்டிருந்தாள்.அடுத்து பல திருவிழாக்கள் வந்து சென்றன.சிலவற்றிற்கு அவர்கள் வரவில்லை. சிலவற்றிற்கு அவர்கள் வந்திருந்தாலும் ஏரோபிளேன் வரவில்லை.
         பொறுத்துப் பார்த்த காளீசு தானே ஒரு ஏரோபிளேன் பொம்மை வாங்கி விடுவது என முடிவு செய்து அவள் அம்மாவிடம் சொன்னாள். இவள் கேட்க கூடாத ஏதோ ஒன்றை கேட்டு விட்டார் போல் ஆரம்பித்து விட்டாள் அவள் அம்மா."வெலக்கமாத்துக்கட்டைக்கு பட்டு குஞ்சம் கேக்குதோ... ஏண்டீ தின்கிற சோத்துக்கே நாய் படாத பாடு படறோம்.இதுல ஏ.....ரோபிலேனுக்கு எங்க போறது..""இல்லம்மா எனக்கு ஒரே ஒரு பொம்ம மட்டும் வாங்கிக் குடு..."வேளையில் இருந்து திரும்பிய அலுப்பும் இயலாமையும் ஒன்று சேர்ந்து கொண்டது அம்மாவுக்கு."கழுத போன வருசம் உக்காந்துருச்சு ..இத  எப்டி கட்டி குடுக்ரதுன்னு தெரியாம  ராவெல்லாம் எனக்கு தூக்கம் புடிக்க மாட்டேங்குது.இது என்னடான்னா நேத்து பொறந்த புள்ளையாட்டம் பொம்ம வேணுமாம்.. நீ என்ன ராசா வீட்டு புள்ளயா..."மீண்டும் காளீசு பிடிவாதம் பிடிக்க கோபம் முற்றி அவளை துவைத்து எடுத்து விட்டாள் அம்மா.என்றாலும் அம்மாவுக்கு காளீசு மீது பாசம் அதிகம்.அடுத்த நாள் அம்மன்பட்டி கோவில் திருவிழாவில், தம்பிக்கும் தங்கைக்கும் ரெண்டு ரூபாய் குடுத்து ராடினத்திற்கு அனுப்பி விட்டு இவளை மட்டும் தனியாக எழுத்து கொண்டு பொய் ஒரு பொம்மை கடையில்  நிறுத்தி அடித்த தழும்பை தடவிக் கொண்டே சொன்னாள்.."ஏரோபிளேன் பொம்ம வாங்கிக்க புள்ள..."பட்டென்று திரும்பி எரோபிலேனைத் தேட ஆரம்பித்தாள் காளீசு.இந்த கடையில் இருந்த ஏரோபிளேன் ரொம்ப சின்னதாய்  இருந்தது.லைட்டுகள் இல்லை.மூக்கு மொழுக்கென்று இருந்தது."அண்ணே லைட்டு எரியிற ஏரோபிளேன் இருக்கா.."இவளை மேலும் கீழும் பார்த்த அவன் "அங்க இருக்கிறது தான் பொம்ம... வந்குரதுனா வாங்கு.. இல்லனா வச்சுட்டு நட.. சொம்மா கடைய மறைச்சுக்கிட்ட நிக்காதா..." பின் அவனோடு அம்மா சண்டை போட்டு வீடு வந்து சேர அன்றைய பொழுது போனது என்றாலும் காளீசுக்கு ஏரோபிளேன் கிடைக்கவில்லை.
          அன்றிலிருந்து காளீசு ஏரோபிளேன் வாக பணம் சேர்க்க ஆரம்பித்தாள்.காளீசுக்கு மாப்பிள்ளை பார்த்து விட்டாள் அம்மா.மாமன் முருகன் தான் மாப்பிள்ளை.டவுனில் வேலை பார்க்கிறான்."காளீசு ஏரோபிளேன் எரோபிலேன்னு கடந்த.. டவுன்ல நெசமான எரோபிலேனே இருக்கும்.பாக்கலாம் புள்ள. நீ அதிஷ்டக்காரிதான்..."இது காளீசின் தங்கை.வெகு நாட்களுக்கு பிறகு தான் மீண்டும் ஏரோபிளேனில் பள்ளிக் கூடம் போவது போல கனவு வந்தது காளீசுக்கு.இந்த முறை உடன் முருகனும் வந்தான்.பரிசம் போட்டதில் இருந்து வேலைக்கு  போவதை நிறுத்தி விட்டாள் காளீசு.தையில கல்யாணம்.முருகனோ ஞாயிற்றுக்கிழமைகள் எல்லாம் காளீசின் வீட்டுக்கு வந்து அவளையே சுற்றி சுற்றி வந்தான்.ஒரு முறை கேட்டான்."புள்ள...அடுத்தவாட்டி உனக்கு டவுன்ல இருந்து என்ன வாங்கியார..."
"எதுனாச்சும்  வாங்கியா மாமா..." "ஏய்..உனக்கு என்ன புடிக்கும் சொல்லு புள்ள..." பிடிக்கும் இந்த வார்த்தை கேட்ட உடனே காளீசுக்கு ஏரோபிளேன் தான் ஞாபகத்துக்கு வந்தது.குதூகலம் காட்டி கேட்டால் "மாமா எனக்கு ஏரோபிளேன் வாங்கியாரியா? ..."சப்பென்று இருந்தது முருகனுக்கு."ஏம்புள்ள மைசூர் மகாராசவையா கட்ட போற.. ஏரோபிளேன் கேக்குற..எதுனா சீல, வளவி னு கேப்பியா... ஏரோபிளேன் வேணுமாம்ல..." 
"என்ன மாமா.. ஏரோபிளேன் பொம்ம தான் வேணும்னு கேட்டேன் ..." "பொம்மையா... அதெல்லாம் நமக்கு பாப்பா பொறந்த உடனே வாங்கித் தர்றேன்.." என்று சொல்லி குறும்பாய்ச் சிரித்தான்.
         அவனைக் கல்யாணம் பண்ணிக் கொண்டு டவுனுக்கு வந்து இரண்டு பிள்ளைகள் ஆகிவிட்டது.எரோபிலேனைக் கிட்டத் தட்ட மறந்தே பொய் விட்டாள் காளீசு.எப்போதாவது டிவியில் ஏரோப்ளேன் பார்த்ததால் பழைய நினைவுகள் வரும்.ஒரு ஏக்கம் படரும்.அவ்வளவுதான்.அன்று அவளின் சின்னக் குழந்தைக்கு அரசு ஆஸ்பத்திரியில் தடுப்பூசி  போட்டுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தாள்.வழி மாறி வேறொரு இடத்தில் இரங்கி விட்டாள்.வீட்டைத் தேடி நடந்து வந்து கொண்டிருக்கையில் அவள் குழந்தை திடீரென அழுதது.மழலையில் "அம்மா...மா..பொம்ம பொம்ம...' என்று கை காட்டியது.கை காட்டிய திசையில் ஒரு அழக்கான பொம்மைக் கடை.அருகில் சென்று பார்த்த காளீசுக்கு கைகள் சில்லிட்டு கண்கள் கலங்கி விட்டன.அவள் சின்ன வயதில் பார்த்த அதே ஏரோபிளேன் பொம்மை.இந்த பொம்மை அதை விடக் கூட பெரியதாய் பளபளப்பாய் இருந்தது.அருகில் சென்று லேசாய் அதன் மூக்கைத் தொட்டு பார்த்தாள்.புல்லரித்தது."இந்த பொம்மை எல்லாம் எம்புட்டு?" 400 ரூவா என்றான் கடைக்காரன்.தன் பர்சைத் திறந்து எண்ணிப் பார்த்தாள்.மடித்து மடித்து வைத்த பழைய நோட்டுக்கள் எல்லாம் சேர்ந்து 600 சொச்சம் இருந்தது.அவள் குழந்தை அதற்குள் "மா.. பாப்பா பொம்ம..பாப்பா பாபா..." என்று ஏரோபிளேன் அருகில் இருந்த ஒரு பாப்பா பொம்மையை நோக்கி இவள் கைகளில் இருந்து தாவ முயன்று கொண்டிருந்தது. தன் பர்சில் இருந்து நானூறு ரூபாயை எண்ணிக் கடைக்காரனிடம் கொடுத்து விட்டு விடு விடுவென்று வீட்டை நோக்கி நடந்தாள் காளீசு ,பாப்பா பொம்மையோடு...


-முற்றும்

5 comments:

Prabu M said...

Good Landing friend...
Nice :)

நிலாமதி said...

அவளுக்கு கிடைகாவிடாலும் அவள் மகளுக்கு கிடைத்ததிருப்தியில்.......
.......அழகான் கதை

திருநாவுக்கரசு பழனிசாமி said...

//வெகு நாட்களுக்கு பிறகு தான் மீண்டும் ஏரோபிளேனில் பள்ளிக் கூடம் போவது போல கனவு வந்தது காளீசுக்கு.இந்த முறை உடன் முருகனும் வந்தான்//

சரியான, இயல்பான காலமாற்றம்.
The landing was good too..

Unknown said...

really an excellent blog.. shows many realities of the our society..

Nambi

kavya said...

thank you so much prabhu and thirunavukarasu for reading the story and commenting on it.
Thanks nambi.keep visiting